search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தறி தொழிலாளி படுகொலை"

    ஈரோட்டில் தறி தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சி.என்.சி. கல்லூரி பின்புறம் காடு போல் ஒரு பகுதி உள்ளது. இங்குள்ள வழி தடத்தில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கண் பகுதியில் ஆழமான காயமும் இதே போல் தாடை பகுதியில் ஆழமான காயமும் இருந்தது.

    அவரை மர்ம ஆசாமிகள் கத்தியால் குத்தி கொலை செய்திருக்க கூடும். அல்லது கூர்மையான கல்லால் அவரை தாக்கி கொன்றிருக்க கூடும் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இது குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ஈரோடு நேதாஜி நகரை சேர்ந்த ராஜ் (வயது 65) என தெரிய வந்தது.

    இவர் அந்த பகுதியில் உள்ள வேலன் நகரில் ஒரு தறி பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி (55) என்ற மனைவியும், விஜயலட்சுமி (35), சுப்புலட்சுமி (32) என்ற 2 மகள்களும், சிவகுமார் (30) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

    சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வர வழைக்கப்பட்டது. அது அங்கிருந்து சிறிது தூரம் ஓடி அருகே உள்ள காம்பவுண்டு சுவர் பக்கம் நின்று குறைத்தது.

    இதனால் கொலையாளிகள் அந்த காம்பவுண்டு சுவற்றில் ஏறி தப்பி சென்றிருக்கலாம் என தெரிகிறது.

    தறி தொழிலாளி ராஜ் இரவு பணிக்கு வேலைக்கு சென்றிருக்க கூடும். அதனால் தான் வரவில்லை என்று அவரது வீட்டில் நினைத்து கொண்டு இருந்தனர்.

    இன்று காலை அவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.

    ராஜை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்ற விவரம் தெரியவில்லை. அருகே மது பாட்டில்கள் கிடந்தது. இதனால் நண்பர்கள் மது குடித்த போது அதில் ஏற்பட்ட தகராறில் ராஜ் கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது.

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×